தேவ ஆவியால்!

"வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" (2 தீமோ. 3:16).

வேத புத்தகம்  ஒரு விலையேறப்பெற்றபொக்கிஷம். அது பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையெல்லாம் உங்கள் மனக்கண்களுக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. நீங்கள் அங்கே முற்பிதாக்களை சந்திக்கிறீர்கள். வேத சரித்திரத்திலே இடம் பெற்ற பரிசுத்தவான்களைப் பார்க்கிறீர்கள். அநேகருடைய முன்மாதிரியான ஜீவியத்தினால் ஆசீர்வாதம் பெறுகிறீர்கள். விழுந்து போன பக்தர்களின் வாழ்க்கை மூலமாக எச்சரிப்பு அடைகிறீர்கள்.

தேவனோடு சரிசமமாய் நடந்து, நண்பனாக பழகிய ஏனோக்கின் வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் உங்களாலும் அன்பின் நேசரோடு நடக்க முடியும். அவரோடு உலாவ முடியும் என்கிற எண்ணம் எழுகிறது. தேவனோடு  சஞ்சரிப்பது எப்படி என்பதை ஏனோக்கு தன் முன்மாதிரியான வாழ்க்கையின் மூலமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.

ஆபிரகாமிடமிருந்த விசுவாசத்தின் உன்னத நிலைமையைக் கண்டு பிரமிப்பு அடைகிறீர்கள். கர்த்தர் அவரை, "புறப்பட்டு வா" என்று அழைத்தபோது, உடனே உறுதியோடு அவரது தகப்பனுடைய வீட்டையும், தாயினுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு கர்த்தர் காண்பித்த தேசத்திற்கு சென்றார். ஆபிரகாமின் எல்லா விசுவாச கிரியைகளும் உங்களுடைய விசுவாசத்தை அனல்மூட்டி எழுப்புகின்றன.

திரளான இஸ்ரவேல் ஜனங்களை அருமையாய் வழி நடத்திச் சென்ற மோசேயையும் சந்திக்கிறீர்கள். கர்த்தர் மேல் வைத்த அன்பு, அவருடைய தாழ்மை, அவருடைய தியாகம் ஆகியவை உங்களை அதிகமாய் கவர்ந்திழுக்கின்றன. கர்த்தரை உற்சாகமாய்த் துதிக்கிற தாவீதை சங்கீதத்தில் சந்திக்கிறீர்கள். அவரோடு சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ வேண்டும் என்கிற பேராவல் உங்களுடைய இருதயத்தை நிரப்புகிறது.

சிங்கக்கெபியில் போடப்படவேண்டிய நிலைமை வந்தபோதும் கர்த்தரை மறுதலிக்காமல் பக்தி வைராக்கியத்தோடு  உறுதியாய் நின்ற தானியேலின் வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு பெரிய சவால்! அவரோடுகூட நீங்களும் சிங்கக்கெபியில் இறங்குவதைப்போல உணருகிறீர்கள். ஆ! தானியேல் ஜெபிக்கும் சத்தம் இன்றும் உங்களுடைய காதுகளில் தொனித்துக் கொண்டிருக்கிறதே.

வேதத்தை திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். வேதம் எழுதப்பட்டு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் கூட இன்றைக்கும் அது புதுமையானதாகவும், வல்லமையானதாகவும், கிருபை நிறைந்ததாகவும் இருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அநேக புத்தகங்கள் இன்று வாசிக்க முடியாமல் பழமையாய் போய்விட்டன. அவற்றின் கருத்துக்கள், நடைகள், இலக்கிய நெறிகள் ஆகியவை இன்றைய சூழலில் அபத்தமாக காட்சியளிக்கின்றன. ஆனால், வேதமோ என்றும் இனியதாகவும், சுவை மிக்கதாகவும், பாக்கியமானதாகவும், உங்கள் ஆத்துமாவை மகிழ்விக்கிறதுமாகவும் இருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நிருபங்களெல்லாம் இன்றைக்கும்  வல்லமையானவையாகவும், உங்களுடைய வாழ்க்கைக்கு ஏற்றவையாகவும், ஆசீர்வாதமானவையாகவும் அமைந்திருக்கின்றன அல்லவா? தேவபிள்ளைகளே, வேதத்தை உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ளுங்கள், ஆவிக்குரிய ஜீவியத்தில் வளருங்கள்!

நினைவிற்கு:- "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2 பேதுரு 1:21).