கர்த்தரைத் தேடினேன்!
“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்" (சங்.34:4).
ஆபிரகாம் லிங்கன் மிக அருமையாக நேசித்து வாசித்த வேதாகமம் இன்றும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை கையில் எடுத்த உடனேயே 34- ஆம் சங்கீதம் இருக்கும் பக்கம் தான் நமக்கு முதலாக பார்வைக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அந்த அதிகாரத்தை அடிக்கடி வாசித்திருக்க வேண்டும். அதிலும் விசேஷமாக இந்த நான்காம் வசனத்தை அவர் திரும்பத் திரும்ப படித்தபடியினால் அந்த வசனம் இருக்கும் இடம் தொந்து அழுக்கடைந்து போயிருக்கிறது.
ஆபிரகாம் லிங்கனுடைய நண்பர்கள் இந்த சங்கீதம்தான் ஆபிரகாம் லிங்கனுக்கு மிக பிரியமான சங்கீதம் என்றார்கள். அமெரிக்காவிலே உள்நாட்டுக் குழப்பம் மிக அதிகமாக ஏற்பட்டு, அதனால் யுத்தம் மூண்ட வேளைகளிலெல்லாம் ஆபிரகாம் லிங்கன் இந்த வசனத்தை எடுத்து வைத்து, "நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்கு செவிகொடுத்து என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்" என்று அவர் திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு.
ஆம், ஆபிரகாம் லிங்கனை பயம் வந்து கலக்கிய போதெல்லாம் அவர் இந்த வசனத்தின் மூலமாக கர்த்தரின் அடைக்கலத்திற்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டார். அதுவே அவரது சாட்சியாக இருந்தது. உங்களுடைய கண்கள் கிறிஸ்துவையே நோக்குமென்றால், அவரையே உங்களுடைய அடைக்கலமாகவும், பெலனாகவும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையாகவும் ஏற்றுக்கொள்ளுவீர்கள், அவ்வாறு ஏற்றுக்கொள்ளுவீர்களென்றால் போராட்ட நேரங்களில் நீங்கள் பயப்படாமல் அவரிடமே ஓடிச்சென்று மறைந்து கொள்ளுவீர்கள்.
ஒரு நாள் ஒரு சிறு குழந்தை எரிகின்ற ஒரு அறைக்குள் சிக்கிக்கொண்டது. இருண்ட அந்த இரவில் எல்லாப் பக்கமும் தீயினால் உண்டான புகை சூழ்ந்தது. அப்போது தகப்பன் முதலாவதாக ஓடி வந்தார். மற்றவர்கள் தீயை அணைக்க முயற்சியெடுக்கும்போது, அவர் கதவின் சாவி துவாரத்தின் மூலமாக: "மகனே, பயப்படாதே" என்று சத்தமாகச் சோல்லி குழந்தையை தைரியப் படுத்தியதுடன், தன் முழு பெலத்தைப் பயன்படுத்தி, உள்ளே நுழைந்து அதைக் காப்பாற்றினார். தகப்பனுடைய குரல் கேட்டது மாத்திரம் அல்ல; தகப்பனுடைய அன்பின் செய்கையை கண்டு மகன் தன் தகப்பனிடத்தில் ஆவலாய்க் குதித்து வந்து அவருடைய மார்பிலே தன்னைப் புதைந்துக் கொண்டான்.
இதைப் போலவே உங்களுடைய பயத்தின் நேரங்களில் கர்த்தர் உங்களோடு பேசுகிறது மாத்திரமல்ல, தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி உங்களைப் பாதுகாக்கவும் செய்கிறார். "நீ பயப்படாதே" என்று சொல்லி தேற்றுகிறார். வேதம் முழுவதும் அந்த அன்பின் ஆறுதலின் வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது. எல்லா பயங்களிலிருந்தும் நீங்கள் விடுதலையாக வேண்டுமென்றால் கர்த்தர் மேல் விசுவாசமும், அன்பும் வைத்து அவரிலேயே சார்ந்துகொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது: "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்" (1யோவான் 4:18).
"பூரண அன்பு" என்பதை மற்ற மொழிபெயர்ப்புகள் "வளர்ந்து முதிர்ச்சியடைந்த அன்பு" என்று கூறுகின்றன. நீங்கள் கிறிஸ்துவோடு பழகப்பழக அவருடைய அன்பிலே வளர்ச்சியடைந்து தேர்ச்சியடைவீர்கள். உங்களுடைய பாரத்தையெல்லாம் அவர் மேல் வைத்து விடுவீர்கள். அப்பொழுது பயம் உங்களைவிட்டு நீங்கிப் போகும்.
நினைவிற்கு:- "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு 5:7).