கர்த்தர் உங்களோடு!

"கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்" (ஏசாயா 52:12).

கர்த்தர் உங்கள் முன்னே போவார். மாத்திரமல்ல, உங்கள் பின்னாலே உங்களைக் காக்கிறவராகவுமிருப்பார். எத்தனை ஆச்சரியம் இது! ஒருமுறை ஒரு உயர்பதவியின் நேர்முகத் தேர்வுக்காக ஒரு அருமையான சகோதரன் புறப்பட்டு சென்றார். போகிற வழியில் அவர் "ஆண்டவரே, உம்முடைய பிரசன்னம் எனக்கு முன்பாகச் செல்லவேண்டும். கேள்விக் கேட்கிறவர்களுடைய கண்களிலே எனக்கு தயவுக் கிடைக்கவேண்டும்" என்று ஜெபித்து விட்டு சென்றார்.

அந்த அலுவலகத்தை அடைந்தவுடனே மாடியிலே நேர்முகத் தேர்வு நடக்கிறது என்று அறிந்த அவர், படிக்கட்டில் கால் வைத்து ஏற ஆரம்பித்தார். திடீரென்று அவரை அறியாமல் ஒரு குரல் ‘நீ ஏறும் படிக்கட்டுகளை எண்ணிக்கொள்’ என்று ஒலித்தது. அப்படியே ஜெபத்தோடு அந்த சகோதரன் தான் ஏறின படிக்கட்டுகளையெல்லாம் எண்ணிக்கொண்டே சென்றார். அந்த நேர்முகத்தேர்விலே பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் உட்கார்ந்திருந்தார்கள்.

அந்த சகோதரனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? "நீ படிக்கட்டில் ஏறி வந்தாயே, மொத்தம் எத்தனை படிக்கட்டுகள் என்பதைச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்கள். கர்த்தர் அவருக்கு முதலிலேயே சொல்லியிருந்தபடியினால் சற்றும் தயக்கமின்றி கணீர் என்று எத்தனை படிக்கட்டுகள் இருந்தன என்று சொல்லிவிட்டார். அவர்கள் எல்லாருக்கும் பெரிய ஆச்சரியம். மாத்திரமல்ல, பெரிய பெரிய அதிகாரிகள் கேட்ட அத்தனைக் கேள்விக்கும் அவர் கணீர் கணீர் என்று பதில் கொடுத்தார். கர்த்தர் அந்த பெரிய வேலையை அந்த சகோதரனுக்கு கிடைக்கச் செய்தார்.

தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் நீங்கள் காலை எழுந்ததும் ‘ஆண்டவரே, இந்த நாள் முழுவதும் உம்முடைய சமுகம் எனக்கு முன் செல்ல வேண்டும். நீரே எனக்கு முன் போகவேண்டும்’ என்று ஜெபிப்பீர்களா? கர்த்தர் உங்களுக்கு முன்பாக செல்லும்போது, அவர் வல்லமையுள்ள தேவனாய் உங்களுக்கு முன்பாகச் செல்லுகிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள். அவர் செல்லுவதினால் சிவந்த சமுத்திரம் இரண்டாகப் பிரிகிறது. யோர்தான் பின்னிட்டு திரும்புகிறது. எரிகோவின் கோட்டை மதில்கள் நொறுங்கி விழுகிறது. இதற்கெல்லாம் காரணம், கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் செல்லுவதுதான்!

மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார், "தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்" (மீகா 2:13).

சாத்தான் எத்தனையோ விதமான தடைகளை உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு விரோதமாகவும், உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு முன்பாகவும் கொண்டு வரக்கூடும். நீங்கள் உண்மையாய் கர்த்தரிடத்தில் "கர்த்தாவே, நீர் எனக்கு முன்பாக செல்ல வேண்டும்" என்று ஜெபிப்பீர்களென்றால், கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு முன்பாகச் சென்று ஒவ்வொரு தடைகளையும் மாற்றிப் போடுவார். நான் உனக்கு முன்னேபோய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று அவர் வாக்குத்தத்தம் செய்யவில்லையா? (ஏசாயா 45:2). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு முன் செல்லுகிறதினால் நீங்கள் சந்தோஷமாய், உற்சாகமாய் முன்னேறிச் செல்லுவீர்களாக!

நினைவிற்கு:- "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்" (ஏசாயா 59:19).