30. கர்த்தரைத் துதிப்பேன்!
"நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன். நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்" (சங். 146:2).
மனிதனுடைய உள்ளம் இயற்கையாகவே அன்புக்காகவும், பாராட்டுதலுக்காகவும் ஏங்குகிறது. மற்றவர்கள் உங்களை புகழும்போது உங்களை அறியாமலேயே சந்தோஷமடைகிறீர்கள். புது பெலனும் வல்லமையும் பெறுகிறீர்கள். எந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பாராட்டி உற்சாகப்படுத்தவில்லையோ, அந்த பிள்ளைகள் மனச்சோர்வோடு தோல்வியுள்ளவர்களாய் விளங்குகிறார்கள். எந்த கணவன் தன் மனைவியைப் பாராட்டவில்லையோ அந்த மனைவி உற்சாகமிழந்து நடைப்பிணமாக வாழுகிறாள்.
ஒரு செல்வந்தனுடைய தொழிற்சாலையிலே அருமையான மேலாளர் ஒருவர் இருந்தார். அவர் மிகத்திறமையாக வேலை செய்து செல்வந்தனுடைய தொழிற்சாலையை மிகவும் முன்னேற்றினார். ஆனால் அந்த செல்வந்தனோ ஒருமுறை கூட அந்த மேலாளரை பாராட்டியதேயில்லை. ஒருநாள் அந்த மேலாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "ஐயா, கடந்த முப்பது ஆண்டுகளாய் நான் விசுவாசத்தோடும், ஊக்கத்தோடும் உங்களின் கீழ் பணியாற்றினேன். ஆனால் நீங்கள் என்னை பாராட்டவுமில்லை. உற்சாகப்படுத்தவுமில்லை. மனம் சோர்படைந்து நான் தற்கொலை செய்துகொள்ளுகிறேன்" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மனிதனுடைய உள்ளம் அன்பையும், பாராட்டுதலையும் எதிர்பார்க்கிறதைப்போல் கர்த்தருடைய உள்ளமும் எதிர்பார்க்கிறது. தாயின் வயிற்றில் உருவான நாள் முதற்கொண்டு அவர் உங்களைக் காத்து வழிநடத்துகிறார். ஒவ்வொரு நாளும் உண்ண உணவும், உடுக்க வஸ்திரமும், தங்கி தாபரிக்க வீட்டையும், குடும்பத்தினரையும் இன ஜனபந்துக்களையும் தந்திருக்கிறார். அருமையான இயற்கையையும் கனிவர்க்கங்களையும் சூரிய சந்திரனையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் அன்போடு சிருஷ்டித்துக் கொடுத்த தேவன், தம்மையே உங்களுக்காக சிலுவையில் அர்ப்பணித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஆண்டவரை நீங்கள் துதியாமலிருந்தால் அவருடைய மனம் எவ்வளவு வேதனைப்படும்?
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டினபோது, கர்த்தரைத் துதிப்பதற்கு ஒரு கூட்டத்தாரையும், ஸ்தோத்தரிப்பதற்கு இன்னொரு கூட்டத்தாரையும் ஏற்படுத்தினார். தேவனுக்கு மகிமை செலுத்துவது துதியாகும். நன்றி செலுத்துவது ஸ்தோத்திரமாகும். துதியும், ஸ்தோத்திரமும் ஜெப வாழ்க்கையிலே இரண்டு செட்டைகளாக விளங்குகிறது.
ஏசாயாவுக்கு கர்த்தர் ஒருநாள் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். பரலோகத்தில் தேவதூதர்கள் எல்லோரும் அவரை எப்படி தொழுதுகொள்கிறார்கள் என்கிற தரிசனம் அது. ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருந்தார். அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிரம்பியிருந்தது. கர்த்தரைச் சுற்றிலும் ஏராளமான சேராபீன்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இரண்டு செட்டைகளால் தங்களுடைய முகங்களை மூடி இரண்டு செட்டைகளால் தங்கள் பாதங்களை மூடி இரண்டு செட்டைகளால் பறந்து சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
கர்த்தருக்கு எத்தனையோ குணாதிசயங்களிருந்தபோதிலும் சேராபீன்கள் அவருடைய பரிசுத்தத்தைப் போற்றித் துதித்தார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிக்கும்போது, கர்த்தருடைய பரிசுத்தம் நிச்சயமாகவே உங்களில் குடிகொள்ளும்.
நினைவிற்கு:- "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்" (1 பேது. 1:15).