31. கர்த்தர் கன்மலையானவர்!

“நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்" (ஏசா. 51:1).

ஏசாயா தீர்க்கதரிசி, நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியை நோக்கிப்பாருங்கள் என்று மாத்திரம் சொல்லாமல், வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும் நோக்கிப்பாருங்கள் என்றும் சொல்லுகிறார்.

நீங்கள் மண்ணிலிருந்து உருவானீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க மண் அல்ல. உங்களிலே ஆத்துமாவுண்டு. ஆவியுண்டு. ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. ஆத்துமா தேவனிடத்திலிருந்து தான் உங்களுக்கு வந்தது. மண்ணிலே உருவான மனுஷன் மேல் கர்த்தர் ஜீவ சுவாசத்தை ஊதினபோது அவன் ஜீவாத்துமாவானான். உங்களிலே மண்ணுக்குரிய காரியமுமுண்டு. விண்ணுக்குரிய காரியமுமுண்டு. மாம்சத்தின்படி பிறந்த பிறப்புமுண்டு. மறுபடியும் ஆவியினால் பிறந்த மறுபிறப்புமுண்டு.

உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கிற அந்த கன்மலையை நோக்கிப் பாருங்கள். அவரே ஞானக் கன்மலை. இஸ்ரவேலரோடு வழிநடந்த கன்மலை. தேவனே அந்த கன்மலை. வேதம் சொல்லுகிறது, "அவர் கன்மலை" (உபா. 32:4), "அந்தக் கன்மலை கிறிஸ்துவே" (1 கொரி. 10:4).

கன்மலையானவரை நீங்கள் நோக்கிப் பார்க்கும்போது, உங்கள் உள்ளம் திடன்கொள்ளுகிறது. ஆவியிலே உற்சாகமடைகிறீர்கள். ஆத்துமாவிலே மகிழ்ச்சியடைகிறீர்கள்.  கன்மலையிலிருந்து நீரூற்று உங்களை நோக்கி சுரந்து வருகிறது. அந்த நீரூற்று உங்களுடைய தாகத்தைத் தீர்க்கிற கன்மலையாகிய இயேசுவிலிருந்து சுரந்து வருகிறது. அந்த நீரூற்று என்ன நீரூற்று தெரியுமா? அதுதான் இரட்சிப்பின் நீரூற்று. ஏசாயா தீர்க்கதரிசி, "நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வீர்கள்" (ஏசா. 12:3) என்று சொல்லுகிறார்.

இயேசு சொன்னார், "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" (யோவா. 4:14). தேவபிள்ளையே, நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும்போது, அந்த கன்மலையிலிருந்து நீரூற்று தோன்றி உங்களுக்குள் பொங்கி வழியும். நீங்களும், உங்கள் வீட்டாரும் அந்த இரட்சிப்பின் நீரூற்றுகளினால் தாகந்தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வீட்டில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டாயிருக்கும்.

கன்மலையிலிருந்து நீரூற்று மாத்திரமல்ல, நதிகளும் புறப்பட்டு வருகின்றன. கன்மலையிலிருக்கும் பனி உருகும்போது அது ஜீவநதியாய் மாறுகிறது. பாருங்கள்! இமய மலையிலிருந்து எத்தனை நதிகள் புறப்பட்டு வருகின்றன! வற்றாத கங்கை அங்கிருந்து புறப்பட்டு வருகிறது. பிரம்மபுத்திராவும் அங்கிருந்துதான் புறப்பட்டு வருகிறது. சிந்து நதி அங்கிருந்து புறப்பட்டு வருகிறது. அவைகளெல்லாம் வருடம் முழுவதும் வற்றாத தண்ணீருள்ள நதிகள்.

கன்மலையாகிய கிறிஸ்துவிலிருந்து ஒரு நதி புறப்பட்டு வருகிறது. அதுதான் பரிசுத்த ஆவியாகிய நதி. தேவபிள்ளைகளே, அந்த கன்மலையை நோக்கிப் பாருங்கள் நீங்கள் நிச்சயமாக பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பப்படுவீர்கள்.

நினைவிற்கு:- "பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்" (வெளி. 22:1).