கிறிஸ்துவின் நீதி!
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவா. 1:12).
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகளாய் மாறுகிறீர்கள். உங்களுடைய ஆவி ஆத்துமாவில் எத்தனை பெரிய மாறுதல் வருகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதைப் பார்க்கிலும் பெரிய பாக்கியமானது இம்மையிலும், மறுமையிலும் இல்லை.
வறுமையின் அடித்தளத்திலே வாழுகிற ஒரு பிச்சைக்காரச் சிறுவனை, ஒரு பணக்காரன் தன் காரிலே ஏற்றிக் கொண்டுபோய், ‘இன்று முதல் நீ என்னுடைய மகன்’ என்று சொல்வானானால், அந்தச் சிறுவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் ஏற்படும்! அந்த பணக்காரனின் வேலைக்காரர்கள் அந்தச் சிறுவனை நன்றாக குளிப்பாட்டி, வாசனை திரவியங்களையெல்லாம் பூசி, புது ஆடைகளை அவனுக்கு உடுத்தி, சுவையான உணவுகளை கொடுக்கும்போது, அவன் தன் வாழ்க்கையின் தரம் எவ்வளவாய் மாறினது என்பதை உணர்ந்து மிகுந்த சந்தோஷப்படுவான் அல்லவா?
அதுபோலவே, நீங்கள் கிறிஸ்துவின் பிள்ளைகளாக அவருடைய குடும்பத்திற்குள் வரும்போது, தேவதூதர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்களைப் பாதுகாக்கிறார்கள். இரட்சிப்பின் சந்தோஷம் உங்களுடைய உள்ளத்தை நிரப்புகிறது. கிறிஸ்துவினுடைய சமுகமும், பிரசன்னமும் உங்களை ஆனந்தக் களிப்படையச் செய்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாடித் துதிப்பது பரவசமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கர்த்தர் உங்களை நீதிமான்களாக்குகிறார். வேதம் சொல்லுகிறது; "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரி. 5:21). ஆம், நீங்கள் தேவனுடைய நீதியைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறீர்கள். உதாரணமாக, அந்த ஏழைச் சிறுவனை அந்தச் செல்வந்தன் தன் மகனாக ஏற்றுக்கொண்டது மாத்திரமல்லாமல், வங்கியிலுள்ள தனது பல கோடிரூபாயையும் அந்தச் சிறுவனுடைய பெயருக்கு மாற்றிவிட்டால் அது எத்தனை ஆச்சரியமானது! அதுபோலத்தான் கிறிஸ்து தம்முடைய பரலோக நீதி அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்குள் நீங்கள் நீதிமான்களாகிவிட்டீர்கள். தேவனுடைய நீதியை சுதந்தரித்துக்கொள்வது எத்தனை பாக்கியமானது! ஆம், முதலாவது தேவன் உங்களை அவருடைய பிள்ளைகளாக்குகிறார், பின்பு நீதிமான்களாக்குகிறார்.
மட்டுமல்ல, உங்களுடைய பாவங்களும், அக்கிரமங்களும் தேவனுக்கும் உங்களுக்குமிடையே தடைச்சுவர்களாயிருந்தன; பிரிவினை உண்டுபண்ணுகிறவைகளாயிருந்தன. நீங்கள் பாவிகளாயிருந்தபோது நிலவிய சூழ்நிலை மாறி, நீங்கள் நீதிமான்களாக்கப்படும்போது கர்த்தர் உங்களுடைய ஜெபத்தை ஆவலோடு கேட்கிறார்.
‘நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது’ என்று வேதம் சொல்லுகிறது. யோசுவா ஒரு நீதிமான். அவனுடைய ஜெபத்தை கர்த்தர் கேட்டு சூரியனையும் சந்திரனையும் அசையவிடாமல் அப்படியே நிறுத்தினார். இது எத்தனை ஆச்சரியமானது! தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு புத்திரசுவிகார ஆவியைக் கொடுத்து நீதிமானாக்கினது எவ்வளவு பெரிய பாக்கியமான காரியம்! கர்த்தருடைய நீதியிலே நிலைத்திருப்பீர்களாக.
நினைவிற்கு:- "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே" (ரோமர் 8:17).