கிறிஸ்துவின் நாமம்!
"....கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரி. 6:11).
இயேசுகிறிஸ்துவின் நாமம் வல்லமையானது மட்டுமல்ல, உங்களைப் பரிசுத்தமாக்கவும் செய்கிறது. இயேசு என்ற பெயரின் அர்த்தமே "....அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்பதேயாகும் (மத். 1:21).
என்னுடைய ஜெப நேரத்திலும், பிரசங்க நேரத்திலும் அதிகமாக இயேசுகிறிஸ்து என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறதினால், ஊழியங்களில் வல்லமையும் பரிசுத்தமும் விளங்குகிறதை நான் அதிகமாகக் கண்டிருக்கிறேன். "இயேசுகிறிஸ்து" என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வானத்திலும் பூமியிலும் வல்லமையுள்ள நாமம் நம் மத்தியில் இறங்கி வல்லமையான காரியங்களைச் செய்கிறது.
அப். பவுல், "இயேசு என்னும் நாமத்தின் மூலமாக எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரி. 10:5) என்று கூறுகிறார். ஆம், இயேசுவின் நாமம் உங்களுக்கு ஒரு வல்லமையான போர் ஆயுதம். அவருடைய நாமத்தை இடைவிடாமல் உச்சரிக்கும்போது, சாத்தான் உங்களது சிந்தனைகளில் ஊடுருவ முடியாதபடி அந்த நாமம் தடுத்து நிறுத்துகிறது.
சிலர் எப்பொழுதும் தோல்வியையே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். விழுதலைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற கற்பனைகளிலேயே கலங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சகோதரிக்கு ஒரே ஒரு மகள். ஒரே மகளாயிருந்தபடியினால் அதன் தாய்க்கு எப்போதும் அந்த பிள்ளையின் மேல் அளவிற்கு அதிகமான கரிசனை இருந்தது. சாத்தான் அந்த சகோதரியினுடைய எண்ணத்தில் புகுந்தான். அந்த தாய், தன் பிள்ளையை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிய பிறகு, மகளுக்கு ஆபத்து நேரிடப்போகிறதைப் போல பல விதமாக கற்பனைச் செய்ய ஆரம்பித்தாள். பின்பு அது உண்மையில் நடக்கிறதாகவே எண்ணி பள்ளிக்கூடத்திற்கு ஓடிப் போய் மகளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவதுண்டு. இதனால் பிள்ளையின் படிப்பு பாழானது.
சத்துரு ஒரு மனுஷனைத் தாக்குவதற்கு தேர்ந்தெடுப்பது அவனது சிந்தனையைத்தான். யூதாஸ்காரியோத்தில் சாத்தான் நுழைந்ததும் அவனுடைய சிந்தனையில் தான். வேதம் சொல்லுகிறது. "சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினான்" (யோவான் 13:2). சாத்தான் அவனுடைய கற்பனைகளிலே முப்பது வெள்ளிக்காசை காண்பித்துக்கொண்டேயிருந்தான். அவனுடைய நினைவிலே பணத்தையும், பணத்தினால் கிடைக்கும் ஆதாயத்தையுமே சிந்தித்துக் கொண்டிருந்தான். இது எத்தனை பரிதாபமான ஒரு காரியம்!
"என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்" என்று கர்த்தர் சொல்லியிருக்கிறாரே (மாற்கு 16:17). ஆகவே இயேசுவின் நாமத்தை உபயோகித்து சாத்தானை துரத்துவீர்களாக. தேவபிள்ளைகளே, நீங்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் நிச்சயமாகவே உங்களுடைய எண்ணங்களிலிருந்தும், நினைவுகளிலிருந்தும் விலகி ஓடிப்போவான் (யாக். 4:7).
நினைவிற்கு:- "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்" (யோவான் 14:13).