நடக்க வேண்டிய வழி!
"...நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்" (சங். 32:8).
பல வேளைகளில் நீங்கள் பாதை தெரியாமல் திகைக்கிறீர்கள். வாழ்க்கையிலே எந்த வழியாக செல்லுவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்கள். துக்கம் என்னும் காரிருள் சூழ்ந்து உங்களைத் தடுமாறப்பண்ணுகிறது. அந்த வேளைகளிலெல்லாம் கர்த்தர் உங்கள் அருகிலே வந்து "நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டுவேன்" என்று சொல்லுகிறார்.
ஒரு முறை ஒரு சகோதரன் அந்தமான் தீவுகளில் அடர்ந்த காடுகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். கொஞ்ச நேரத்தில் அவர் வழி தவறிப் போய்விட்டார். எல்லாப் பக்கமும் ஒரே மாதிரியாய் குழப்பமாகவே காட்சியளித்தது. நல்ல வேளை, அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சகோதரன் அவருக்கு துணையாய் வந்ததினால் சரியான பாதையில் வீடு திரும்ப முடிந்தது.
தேவபிள்ளைகளே, கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பிரச்சனைகளின் மத்தியிலும் உங்களை வழிநடத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார். உங்களுடைய அனுபவம் குறைவுதான். ஆனால் கர்த்தருடைய அனுபவமோ அநாதிகாலம் முதற்கொண்டு இருக்கிறது. உங்களுடைய ஆயுசுநாள் கொஞ்சம்தான். ஆனால் ஆண்டவரோ நித்திய நித்தியமாயிருக்கிறார். ஆகவே உங்களை அருமையாய் வழிநடத்த அவர் வல்லமையுள்ளவர்.
ஜெர்மனி தேசத்தில் ஒரு சாலை விபத்து நேரிடுமென்றால் உடனடியாக பின்னால் வரும் ஆயிரக்கணக்கான கார்கள் தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும். இதைத் தவிர்ப்பதற்காக அந்த அரசாங்கம் என்ன வழி செய்திருக்கிறது தெரியுமா?
போக்குவரத்து ஒழுங்கு செய்யும் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறந்து வந்து, விபத்து குறித்த விபரங்களை உடனடியாக ரேடியோ மூலம் மற்ற கார்களுக்கு அறிவிப்பார்கள். அப்பொழுது அவர்கள் அந்த எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு தாங்கள் செல்லவேண்டிய மாற்று மார்க்கத்தை தெரிந்துகொண்டு அதன் வழியாக எளிதாக சென்றுவிடுவார்கள்.
சாதாரணமாக கார் ஓட்டினால் தனக்கு முன்னால் எதிரில் இருக்கிற கார்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலாது. ஆனால் உயர இருக்கிற ஹெலிகாப்டரிலுள்ள அதிகாரிகள் மேலே இருந்து பார்ப்பதால் சூழ்நிலையை தெளிவாக அறிந்துகொள்ளுகிறார்கள். அதுபோலவே உங்களுக்கு மேலாக மிக உயரத்திலிருந்து உங்களைக் கண்காணிக்கிற தேவனுண்டு. அவர் உங்களுடைய நிகழ்காலத்தை மாத்திரமல்ல, எதிர்காலத்தையும், உங்களுடைய நித்தியத்தையும் நோக்கிப் பார்க்கிறவராயிருக்கிறார். அவர் உங்களை வழிநடத்தும் போது மிக அருமையாய், நேர்த்தியாய் நடத்துவார்.
தாவீது ஆடுகளை எந்த பாதையில் நடத்தினால் சிங்கங்களுக்கும் கரடிகளுக்கும் தப்புவிக்க முடியும், எந்த வழியில் நடத்தினால் அவைகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கும், அமர்ந்த தண்ணீர் கிடைக்கும் என்றெல்லாம் அறிந்திருந்தார். காரணம், ஆடுகளுக்கு இருக்கும் அறிவைப் பார்க்கிலும் மேய்ப்பனின் அறிவு பெரிதானது. தேவபிள்ளைகளே, இன்றைக்கு நீங்கள் கர்த்தரை உங்களுடைய மேய்ப்பனாய் கொண்டிருப்பீர்களென்றால், நீங்கள் நடக்கவேண்டிய வழியை அவர் உங்களுக்கு நேர்த்தியாக காண்பிப்பார்.
நினைவிற்கு:- "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6).