புதியபாடல்!
"...என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்" (சங். 40: 2,3).
தாவீதின் உள்ளம் பரவசமான உள்ளம். தேவன் செய்த நன்மைகளையெல்லாம் எண்ணி துதிக்கிற உள்ளம். ‘பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்தார், என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தினார், என் அடிகளை உறுதிப்படுத்தினார்‘ என்றெல்லாம் சொல்லிவிட்டு முடிவாக, ‘தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்’ என்று சொல்லி மனம் மகிழுகிறார்.
இந்தப் பாடல் பூமியிலுள்ள இசை வல்லுநர்கள் இயற்றின பாடலுமல்ல, பரலோக தேவ தூதர்கள் கொடுத்த பாடலுமல்ல, தேவனாகிய கர்த்தரே இந்தப் பாடலைக் கொடுத்தார் என்று சொல்லுகிறார். ஆம், அது ஒரு துதியின் பாடல். அது எத்தனை இனிமையான ஒரு பாடல்!
ஒரு மனிதன் கிறிஸ்துவண்டை வரும்போது, அவனுடைய வாழ்க்கையையெல்லாம் அவர் புதிதாக்குகிறார். புதிய உடன்படிக்கை செய்கிறார், புதிய இருதயத்தைத் தருகிறார், புதிய ஆவியை உள்ளத்தில் வைக்கிறார், புதிய இரக்கத்தை காண்பிக்கிறார். மட்டுமல்லாமல் புதியப் பாடலையும் தந்துவிடுகிறார். ஆம், நம் தேவன் எல்லாவற்றையும் புதிதாக்கும் தேவன்.
ஒவ்வொருநாளும் கர்த்தர் புதுப்புது அனுபவங்களைத் தருகிறதினாலே, அவருடைய புதுக்கிருபைகளை ருசித்து, புதுப்பாடல்களை பாடுங்கள். "கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைப் பாடுங்கள்" (சங். 96 :1). "கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்" (சங். 98 :1). "கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக" (சங். 149 :1) என்று தாவீது சொல்லுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷத்திலே, அநேக புதுப்புது பாடல்களை காணலாம். தேவதூதர்களின் பாடல்களையும் காணலாம். மீட்கப்பட்டோரின் பாடல்களையும் காணலாம். அதில் பெரும்பாலான பாடல்கள் வெற்றியின் பாடல்கள். உலக வாழ்க்கையை வெற்றியோடு முடித்து பரலோகம் சென்றவர்கள் புதுப்பாடலை பாடி தங்களுக்கு ஜெயத்தைக் கொடுத்த தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். "எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடுகிறார்கள்" (வெளி. 5 : 10).
அந்தப் புதுப் பாடல்கள் வெற்றியின் பாடல்கள் மட்டுமல்ல, இரட்சண்ய பாடல்களும் கூட. சிமியோன் இரட்சகனை கைகளில் ஏந்தியதும் ஒரு அழகான இரட்சண்ய பாடலை பாடினார். "இரட்சண்யத்தை என் கண்கள் கண்டதே" என்றுச் சொல்லி அவர் பாடிய பாடலை லூக்கா 2 - ம் அதிகாரத்தில் காண்கிறோம்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார்; "என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சண்ய பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்" (சங். 32:7). தேவபிள்ளைகளே, கர்த்தர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறவாதேயுங்கள். அவருக்கு புதுப்பாடலை பாடுங்கள். அவரது அதிசயங்களை விவரித்துப் பாடுங்கள்.
நினைவிற்கு :- "கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம்" (ஏசா. 38:20).