தேவன் எழுந்தருளுவார்!
"தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (சங்.68:1).
‘எழுந்தருளுவார்’ என்கிற வார்த்தையைச் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்ய, உங்களுக்காக வழக்காட, உங்களுக்காக யுத்தம் செய்ய எழுந்தருளுவார்.
ஒருவர் உட்கார்ந்து கொண்டோ, அல்லது படுத்துக்கொண்டோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் திடீரென்று நீங்கள் வந்து உங்கள் மகன் கார் விபத்தில் சிக்கிவிட்டான் என்று சொல்லுவீர்களென்றால் அவர் என்ன செய்வார்? ‘அப்படியா’ என்று கேட்டு சும்மா இருந்துகொண்டிருக்க மாட்டார். துள்ளி எழுந்து ஓட்டமா ஓடத்தொடங்குவார். காரணம், தன் பிள்ளையின் மேல் அவருக்குள்ள பாசமே அப்படி எழச் செய்கிறது.
நம் தேவன் அன்புள்ள பரமபிதா அல்லவா? உங்களுக்கு சிறு துன்பம் வரும்போது, அதை அவர் தாங்கிக் கொள்ள மாட்டார். பதைபதைத்து எழுந்தருளுவார். தேவன் எழுந்தருளுவார் என்று வேதம் சொல்லுகிறது. "ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (சங்.12:5).
குடும்பத்திலே நீங்கள் பெருமூச்சு விடுகிறீர்களா? உங்கள் வேலை ஸ்தலத்திலே நீங்கள் பெருமூச்சு விடுகிறீர்களா? இன்று உங்கள் பெருமூச்சின் சத்தமும், உங்கள் கண்ணீரின் சத்தமும் கர்த்தருடைய காதுகளில் விழுகிறது. அவர் எழுந்திருந்து அதனுடைய சீற்றங்களை அடக்குவார். வேதம் சொல்லுகிறது, "கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலமும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்" (ஏசா.25:4).
உங்களுடைய பிரச்சனைகள் பெருகுகிறதா? போராட்டங்கள் சீறுகிறதா? கர்த்தர் அமைதியாய் இருப்பது போன்று தோன்றுகிறதா? ஓடி வந்து அவருடைய பாதத்தில் முழங்கால்படியிடுங்கள். கண்ணீர் சிந்தி ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் கண்ணீரைக் கண்டு கர்த்தர் ஒருபோதும் சும்மாயிருப்பதில்லை. நிச்சயமாகவே உங்களுக்காக அவர் எழுந்தருளுவார்.
தாவீது சொல்லுகிறார், "கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும். மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்" (சங்.17:13,14).
தேவபிள்ளைகளே, இன்பத்திலும், துன்பத்திலும் கர்த்தரை நோக்கிப்பாருங்கள். தனக்கு உதவிசெய்யும்படி பிதாவின் வலதுபாரிசத்தில் எழுந்து நின்ற கிறிஸ்துவை ஸ்தேவானின் கண்கள் கண்டதே. உங்களுக்காகவும் கர்த்தர் எழுந்தருளுவார்.
நினைவிற்கு:- "ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்" (ஏசா.30:18).