நடனமாடி!
"அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்" (சங். 149:3).
நீங்கள் "நடனமாடி" கர்த்தரைத் துதிக்கும்போது, கர்த்தருக்கும் மகிழ்ச்சி. உங்களுக்கும் ஆனந்தம். கர்த்தர் செய்த நன்மைகளை நினைக்கும்போது உங்களால் அமைதியாய் இருக்கவே முடியாது. கர்த்தருடைய பிரசன்னத்தை உணரும்போது உங்களால் களிகூராமலிருக்க முடியாது.
நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய சொந்த வீடு திரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி, பிள்ளைகள் உங்களை எப்படி வரவேற்பார்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! நீங்கள் வந்துவிட்டீர்கள் என்பதினால் அவர்கள் ஆனந்த கூத்தாடுவார்கள். உங்களுக்கும் மகிழ்ச்சி; அவர்களுக்கும் மகிழ்ச்சி!
கர்த்தருடைய பிரசன்னம் உங்கள் மத்தியில் இறங்கி வரும்போது, உங்களால் களிகூராமலிருக்கவே முடியாது. கர்த்தருடைய சமுகத்தில் ஆனந்தமும் அவருடைய சந்நிதானத்தில் பரிபூரண பேரின்பமுமுண்டு (சங். 16:11) என்று வேதம் சொல்லுகிறது. பரம பிதாவின் சந்நிதானம் மகிழ்ச்சியான சந்நிதானம்.
பொதுவாக வெற்றியைக் கொண்டாடுகிறவர்கள் நடனமாடி களிகூர்ந்து கொண்டாடுவார்கள். இரண்டு கால்பந்தாட்ட குழுக்கள் முழு மூச்சோடு விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். முடிவில் வெற்றி பெற்ற குழுவினர் அந்த கால்பந்தாட்ட மைதானத்திலேயே நடனமாடி தங்களுடைய வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
இஸ்ரவேல் ஜனங்களும் அப்படிதான் வெற்றியைக் கொண்டாடினார்கள். கர்த்தர் பார்வோனையும், அவனுடைய சேனைகளையும், குதிரைகளையும், வீரர்களையும் சிவந்த சமுத்திரத்திலே தள்ளிய போது இஸ்ரவேலருக்கு பெரிய மகிழ்ச்சி. வேதம் சொல்லுகிறது, "ஆரோனுடைய சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டு போனார்கள்" (யாத். 15:20).
நீங்கள் இன்னொரு சம்பவத்தையும் நியாயாதிபதிகளின் புத்தகங்களில் வாசிக்கலாம். யெப்தா அம்மோன் புத்திரருக்கு விரோதமாய் யுத்தம் செய்ய புறப்பட்டுப்போனான். கர்த்தர் அவர்களை அவன் கைகளில் ஒப்புக்கொடுத்தார். யெப்தா மிஸ்பாவிலிருந்து தன் வீட்டிற்கு வரும்போது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து அவனுக்கு எதிர்கொண்டு வந்ததாக நியா. 11:34 இல் வாசிக்கிறோம்.
உலகத்திலுள்ள வெற்றிகளிலெல்லாம் தலைசிறந்த வெற்றி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அடைந்த வெற்றிதான். சிலுவையிலே அவர் உலகத்தை, மாம்சத்தை, பிசாசின் தலையை நசுக்கி அமோக வெற்றியடைந்தார். அந்தகார வல்லமைகளை ஜெயித்து உங்களுக்கு ஜெயம் கொடுத்தார். கர்த்தரை எவ்வளவு நடனமாடி போற்றி துதித்தாலும் அவர் செய்த நன்மைகளுக்கு அது போதாது. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்திருக்கிறார். உங்களுக்காக கல்வாரி போரிலே ஜெயங்கொண்டிருக்கிறார். நீங்கள் மகிழ்ச்சியாயிருங்கள். கர்த்தரைத் துதித்துப் பாடி நடனமாடுங்கள்.
நினைவிற்கு:- "...என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்" (2 சாமு. 6:21).