வல்லமை தருகிறார்!

"ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது" (நீதி. 8:14).

ஒருமுறை தேவ ஊழியரான கேம்பல் மார்கன் என்பவர் மிகவும் வியாதிப்பட்டார். சரீர பெலவீனம் அவரை பாதித்தது. நித்தியத்திற்குள்ளாகச் செல்லவேண்டிய கடைசி நிமிடம் வந்தது என்பதை அவர் உணர்ந்தார். இரவும் பகலும் தன்னறிவில்லாமல் படுத்திருந்தபோது அநேகர் அவருக்காய் கூடி ஜெபித்தார்கள். கர்த்தர் கிருபையாய் அவருடைய ஜீவனைப் பாதுகாத்துக் கொடுத்தார்.

அடுத்த நாள் இன்னொரு அருமையான தேவ மனுஷன் அவரைப் பார்க்க வந்தபோது "ஐயா, கண்ணீரின் பாதையிலும், வியாதியின் பாதையிலும் நான் நடந்து செல்லுகிறேன். ஏன் கர்த்தர் இதை எனக்கு அனுமதித்தார் என்று தெரியவில்லை. என் வாழ்க்கையே உடைந்துவிடுகிறதுபோல இருக்கிறது" என்றார் கண்ணீரோடு.

அதற்கு அந்த தேவ மனுஷன், தன்னுடைய அன்பின் கரங்களினால் அவரைத் தொட்டு, "சகோதரனே, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பாடுகளின் பாதையில் கடந்து செல்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் விளங்கும். உங்களுடைய சொந்த ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ளுவார்கள். உங்கள் சபையின் மக்களும் அதைத் தெரிந்து கொள்ளுவார்கள். இந்த பாடுகள் அனைத்தும் கர்த்தருடைய வல்லமை உங்களின் வாழ்க்கையில் மிக அதிகமாக வெளிப்படப் போகிறது என்பதையே உணர்த்துகின்றன" என்றார்.

இந்த வார்த்தைகள் அந்த போதகருடைய உள்ளத்தைத் தேற்றியது. "ஆண்டவரே, உமது சித்தத்தின்படியே என்னை நடத்தும்". பாடுகளின் மூலமாய் நீர் உம்முடைய வல்லமையை என்னிடத்தில் வெளிப்படுத்துவது உமக்குச் சித்தமானால் அப்படியே என்னை நடத்தும் என்று சொல்லி ஸ்தோத்தரித்தார்.

எந்த ஒரு மனுஷன் எழுப்புதலுக்காகவும், தேவனுடைய வல்லமைக்காகவும் கிரயம் செலுத்த ஆயத்தமாயிருக்கிறானோ, அந்த மனுஷனுடைய வாழ்க்கையிலே நிச்சயமாகவே கர்த்தருடைய வல்லமை வெளிப்படும். இது நீங்கள் தேவனிடத்திலிருந்து கற்றுக் கொள்ளுகிற மிகப்பெரிய பாடமாகும். கர்த்தர் யாரை ஆறுதலின் பாத்திரமாக பயன்படுத்துவார் தெரியுமா? யாரைக் கொண்டு மற்றவர்களைத் தேற்றுவார் தெரியுமா? பாடுகளின் வழியாகச் சென்ற தேவனுடைய பிள்ளைகளின் மூலமாகத்தான்.

அநேகருக்கு ஒரு ஆறுதலின் மகனாகவோ தாயாகவோ பயன்படுத்தப்பட, நீங்கள் பல அனுபவங்களின் வழியாய் நடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் தண்ணீர்களைக் கடக்கிறீர்கள். ஆறுகளைக் கடக்கிறீர்கள். அக்கினியைக் கடக்கிறீர்கள். பின்பு, மற்றவர்களுக்கு ஆறுதல் செய்கிற கிருபையின் பாத்திரமாய் மாறிவிடுகிறீர்கள்.

யோசேப்பைப் பாருங்கள்! சிறு வயதிலிருந்தே அவருக்கு எத்தனையோ பாடுகள், ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் யோசேப்பை மிக அதிகமாக உயர்த்த ஆரம்பித்தார். எகிப்து முழுவதற்கும் அதிபதியாக்கி எகிப்தின் மக்களை பஞ்சத்திலிருந்து மீட்டார். மாத்திரமல்ல, எந்த சகோதரர்களால் தொல்லைகொடுக்கப்பட்டாரோ அதே சகோதரர்களுக்கு ஆதரவையும், ஆறுதலையும் வழங்கினார். இதனால்தான் அவர் மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானார். தேவபிள்ளைகளே, அந்த கர்த்தர் நிச்சயமாகவே உங்களையும் உயர்த்துவார்.

நினைவிற்கு:- "ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்" (சங். 106:8).