கிறிஸ்துவின் இரத்தம்!

"...எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்" (வெளி. 5:9,10).

கர்த்தர் மனுஷனுக்கு கொடுத்தருளிய எல்லா விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களிலும் மிக மேன்மையான ஆசீர்வாதம் அவருடைய இரத்தத்தினால் உண்டாகும் ஆசீர்வாதம்தான். பரலோக தேவன், நமக்காக பூமியில் இறங்கி வந்து தன்னுடைய இரத்தத்தை சிந்தினாரென்றால் அது எவ்வளவு சிறப்பானது! எவ்வளவு மேன்மையானது! "அது விலையேறப்பெற்ற இரத்தம்" என்று பேதுரு குறிப்பிடுகிறார் (1 பேது. 1:19).

பரிசுத்தவான்கள் அந்த இரத்தத்தை நித்தியத்திலும் கூட நினைவுகூர்ந்து நன்றியினால் நிரம்பி தேவனை ஸ்தோத்தரிக்கிறார்கள் (வெளி. 1:6; 7:14; 5:9). நீங்கள், ஒவ்வொரு நாளும் அந்த கல்வாரியண்டை பயபக்தியோடும், ஜெபத்தோடும் வந்து நிற்பீர்களாக. கல்வாரி இரத்தத்தின் பெருந்துளிகள் உங்கள் மேல் விழட்டும். உங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கிறிஸ்துவின் இரத்தம் கடந்துசென்று, கழுவி, பரிசுத்தப்படுத்தி உங்களை நீதிமானாக்கட்டும். அந்த இரத்தத்தின் வல்லமை உங்களை நிரப்பி நாள் முழுவதும்  ஆட்கொள்ளட்டும்.

கெத்சேமனே தோட்டத்திலே இயேசு ஜெபித்துக்கொண்டேயிருக்கும்போது, அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் அங்கே விழுந்தது. அந்த கெத்சேமனேயின் இரத்தம் உங்கள் உள்ளத்தில் விழுமென்றால், அந்த கெத்சேமனேயின் ஜெபஆவி உங்கள் இருதயத்தில் ஜெபத் தீயை பற்றவைக்கும்; விண்ணப்பத்தின் ஆவியையும், மன்றாட்டின் ஆவியையும் உங்களுக்குள் கொண்டு வரும்.

முள்முடி சூட்டப்பட்ட கிறிஸ்துவின் தலையிலிருந்து வழிகிற இரத்தம், உங்கள் வாழ்க்கையை குத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற சாபங்களை முறித்துப் போடும். எந்த முற்பிதாக்களின் சாபமும், எந்த நியாயப்பிரமாணத்தின் சாபமும் உங்களையோ உங்களுடைய பிள்ளைகளையோ அணுகாமல் அந்த இரத்தம் பாதுகாத்துக் கொள்ளும். ஆம், கிறிஸ்து உங்களுக்காக சாபமாகி சிலுவை மரத்திலே தன்னுடைய இரத்தத்தை ஊற்றினாரே! (கலா. 3:13).

கிறிஸ்துவின் கையிலிருந்து வழிகிற இரத்தம் உங்கள்மேல் விழட்டும். ஒவ்வொரு நாளும் அதை தியானியுங்கள். உங்கள் எதிர்காலம் அவருடைய கரத்தில் அல்லவா இருக்கிறது? அவர் அன்போடுகூட உங்களுக்கு நேராய் தன் காயப்பட்ட கரத்தை நீட்டி "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது" (ஏசா. 49:16) என்று சொல்லுகிறார்.

கிறிஸ்துவின் பாதங்களில் வழிகிற இரத்தத்தை தியானியுங்கள். அவர் தம் பாதங்களினால் சத்துருவின் தலையை நசுக்கி ஜெயங்கொண்டாரே! அந்த இரத்தத்தின் வல்லமை உங்கள்மேல் இறங்கிக் கொண்டேயிருக்கட்டும். அப்பொழுது, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரத்தையும், வல்லமையையும், ஆளுகையையும் பெற்றுக்கொள்வீர்கள் (லூக். 10:19).

கிறிஸ்து தம் சரீரமெல்லாம் தழும்புகளை ஏற்றுக்கொள்ளும்படி, சவுக்குகளினால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தினாரே! அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று வேதம் சொல்கிறபடியே, அந்த தழும்புகளுள்ள கரத்தை இப்பொழுதே கர்த்தர் உங்கள்மேல் வைத்து, உங்களுடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.  

நினைவிற்கு:- "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 1:19).