இயேசுவின் குணமாக்குதல்!

"அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது" (அப். 3:16).

"சர்வாங்க சுகம்" என்ற பதத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருடைய நாமத்தை பேதுரு உபயோகப்படுத்தினபோது, பிறவி சப்பாணி சுகத்தைப் பெற்றுக்கொண்டான். அது பரிபூரணமான சுகம். எந்த குறைவுமில்லாத நிறைவான சுகம். அதுவே சர்வாங்க சுகம். எந்த மருந்தினாலும், எந்த டாக்டராலும் சர்வாங்க சுகத்தைத் தரவே முடியாது. சில மருந்துகள் வியாதியிலிருந்து ஓரளவு விடுதலையைத் தருவதைப்போல காணப்பட்டாலும், அந்த மருந்தின் பின்விளைவினால் பல்வேறு பெலவீனங்கள் வந்துவிடுகின்றன.

ஆனால் பரிபூரணமான சர்வாங்க சுகத்தை ஒரு மனுஷனுக்குக் கொடுக்க முடியுமென்றால் அது இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே முடியும். இந்த வசனத்தை மீண்டும் வாசித்துப் பாருங்கள். "அவருடைய நாமத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது" (அப். 3:16).

ஆம், இயேசுவின் நாமத்தினாலே விசுவாசம் வருகிறது. அந்த விசுவாசம் சர்வாங்க சுகத்தைக் கொண்டு வருகிறது. அப். பேதுரு, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட" (அப். 3:6) என்று சொன்னார்.

"என்னிடத்தில் இருக்கிறவர் பெரியவர். அவர் நாமம் இயேசுகிறிஸ்து. அவரை அறிகிற அறிவேயல்லாமல் வேறே உலக அறிவோ, வைத்திய ஞானமோ பெரிய படிப்போ என்வசம் இல்லை. ஆனால் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தையுடையவர் என்னிடத்தில் இருக்கிறார். ஆகவே அவர் நாமத்தில் நீ எழுந்து நட" என்பதே பேதுருவின் விளக்கம்.

பாருங்கள்! ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பெயர் இருக்கிறது. "எய்ட்ஸ்" என்ற பெயரைச் சொன்னவுடனே அந்த நோய் எவ்வளவு கடுமையான, உயிர்க் கொல்லி நோய் என்பதை அறிகிறோம். ‘கேன்சர்’ என்பது ஒரு கொடிய நோயின் பெயர். ‘ஆஸ்துமா’ ஒரு நோயின் பெயர். அதே நேரத்தில் இயேசுவின் திருப்பெயர் இந்த நோயின் வல்லமைகளையெல்லாம் நீக்கி சர்வாங்க சுகத்தைத் தரக்கூடிய வல்லமையுள்ள பெயராகும்.

அவருடைய பெயரில், வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோர் யாவருடைய முழங்கால்களும் முடங்கும். நாவுகள் யாவும் அவர் கர்த்தர் என்று அறிக்கைப்பண்ணும். தேவபிள்ளைகளே, நோய்களும் வியாதிகளும் பாதாளத்திலிருந்தும், பிசாசினிடத்திலிருந்தும், நோய் கிருமிகளிடத்திலிருந்தும் வந்தாலும், கர்த்தர் அவைகள் எல்லாவற்றையும் அதமாக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

கர்த்தருடைய நாமத்தை திரும்பத் திரும்ப சொல்லுங்கள். "ஆண்டவரே உம்முடைய திருப்பெயர் எல்லா நோய்களையும் பெலவீனங்களையும் மேற்கொள்ள வல்லமையுள்ளது என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய நாமத்தில் அதிகாரமும், ஆளுகையுமுண்டு. இப்பொழுதே என்னை சுகமாக்கும்" என்று கேட்டு சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

நினைவிற்கு:- "...என் நாமத்தினாலே....வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" (மாற்கு 16:17,18).