கர்த்தர் அறிந்திருக்கிறார்!

"தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்" (2 தீமோ. 2:19).

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் அவருடைய கண்கள் அவர்களைப் பார்க்கிறது. தேவபிள்ளைகளே,  நீங்கள் அவருடைய கையிலிருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதேயுங்கள்.கோடாகோடி நட்சத்திரங்கள் வானமண்டலத்திலிருந்தாலும் கர்த்தர் ஒவ்வொன்றையும் பேர் சொல்லி அழைக்கிறார். ஒவ்வொன்றையும் அதனதன் பாதையிலே நேர்த்தியாய், செம்மையாய் செல்லும்படி செய்கிறார். இந்த உலகத்திலே பல கோடி மக்களிருந்தாலும் ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருக்கிறார். ஒவ்வொருவருடைய ஜெபமும் அவருக்குக் கேட்கும்.

வனாந்திரத்தில் கர்த்தர் மோசேயைப் பார்த்து, ‘உன்னை பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்’ (யாத். 33:17) என்றார். அந்த வார்த்தை மோசேக்கு எத்தனை ஆறுதலாய் இருந்திருக்கும்! உங்களைப் பேர் சொல்லி அழைக்கும்படி அவர் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுடைய துயரங்கள், மன வியாகுலங்கள், இருதயத்தின் ஏக்கங்கள், பெருமூச்சுகள் என ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறார்.

பலவேளைகளில் மனைவியின் துயரங்களை கணவன்கூட அறிவதில்லை. பிள்ளைகளின் துயரங்களை பெற்றோரே அறிவதில்லை. ஆனால் கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறது எத்தனை அருமையான ஒரு பாக்கியம்! ‘மோசே, நான் உன்னை அறிந்திருக்கிறேன்’ என்று அவர் சொல்கிறார்.

மோசேயைக் குறித்து அவர் என்ன அறிந்திருந்தார்? வாலிப நாட்களில் மோசே கர்த்தருக்கென்று செய்திருந்த பிரதிஷ்டையையும், மோசேயின் தியாகங்களையும் அறிந்திருந்தார். மோசே பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்ததையும், தேவனுடைய பிள்ளைகளோடு பாடநுபவிக்க தன்னை ஒப்புக்கொடுத்ததையும் அறிந்திருந்தார். அந்த மோசேயை அவரால் எப்படி மறக்க இயலும்? தேவனுடைய அன்பு மோசேயின் மேல் அளவில்லாமல் பொங்கினது. மோசே வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு, யாராலும் அறியப்படாதவனாய் இருந்த வேளையில் அந்த ஓரேப் பர்வதத்தில், கர்த்தர் மோசேயைப் பார்த்து ‘மோசே, மோசே’ என்று அன்புடன் அழைத்தார் (யாத். 3:4).

இன்றைக்கும்கூட கர்த்தர் உங்களையும் அறிந்திருக்கிறார்; அழைக்கிறார். ‘என் மகனே, மகளே, பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னை பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன், என்னுடையவள்’ என்று சொல்லி உங்களைத் தேற்றுகிறார். ஆம், அவர் உங்களை பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறார். நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், உங்களுடைய பிரதிஷ்டை, தீர்மானங்கள் எல்லாவற்றையும் அவர் அறிந்தவராயிருக்கிறார்.

ஒருவேளை உங்களைக் குறித்து நீங்களேகூட அறியாமலிருக்கலாம். உங்களுடைய தாலந்துகள், திறமைகளைக் குறித்து தெரிந்து கொள்ளாமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், உங்களை அறிந்திருக்கிற கர்த்தர் உங்களுடைய திறமைகளையும், தாலந்துகளையும் எடுத்துப் பயன்படுத்த உங்களைப் பேர் சொல்லி அழைக்கிறார். தேவபிள்ளைகளே, அவர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்கிறபடியினால் அவர் நிச்சயமாகவே உங்களை ஏற்றகாலத்தில் உயர்த்துவார். நீங்கள் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாயிருக்கிறீர்கள் அல்லவா? உங்களுடைய மேய்ப்பர் உங்களை அறிந்திருக்கிறார்!

நினைவிற்கு:- "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).