தேவனுடைய காலம்!
"காலம் நிறைவேறினபோது,... தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலா. 4:5).
கிறிஸ்துவின் பிறப்பு, காலத்தை இரண்டாய் பிரிக்கிறது. கிறிஸ்து பூமியிலே வருவதற்கு தேவன் ஒரு குறிப்பிட்ட காலத்தை முன்குறித்திருந்தார். முற்பிதாக்கள் அவருடைய நாளை எண்ணி ஏங்கினார்கள். தீர்க்கதரிசிகள் அவருடைய பிறப்பை முன்னறிவித்தார்கள். ஆனாலும் இயேசு பூமியிலே பிறப்பதற்கு குறிப்பிட்ட காலம் நிறைவேற வேண்டியது அவசியமாயிருந்தது.
நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம், "இயேசு ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தார்? விஞ்ஞானம் வளர்ந்திருக்கிற இந்த நாளில் அவர் பிறந்திருந்தால் தீவிரமாக அவருடைய சுவிசேஷத்தை உலகம் முழுவதிலும் அறிவித்திருக்கலாமே! அவர் கழுதையின் மேல் ஏறி பயணம் செய்யாமல், விமானத்தில் ஏறி பறந்திருக்கலாமே! வனாந்தரத்திலே நின்று பிரசங்கிக்காமல் தொலைக்காட்சியிலே தோன்றி உலகம் முழுவதற்கும் ஒரே நேரத்தில் பிரசங்கித்திருந்திருக்கலாமே! ஆயிரக்கணக்கான அற்புதங்களையும் அடையாளங்களையும் கிருபையாய் நிகழ்த்தியிருந்திருக்கலாமே! அவருடைய பிரசங்கங்களையெல்லாம் தினசரி பேப்பர்களிலும் வெளிவரச் செய்திருக்கலாமே" என்றெல்லாம் சிந்திக்கக்கூடும்.
இன்னும் சிலர், இயேசு ஆதாம் ஏவாள் காலத்தை தொடர்ந்து வந்திருந்தால் அநேகருக்கு அதிகமான ஆசீர்வாதம் கிடைத்திருந்திருக்கும். அநேக ஆடுகள் வீணாக பலியிட வேண்டியதிருந்திருக்காது. ஆசரிப்புக்கூடாரமும், நியாயப்பிரமாணமும் வேண்டியதிருந்திருக்காது என்று எண்ணுகிறார்கள். கர்த்தர் நோவாவின் காலத்தில் வரவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் காலத்திலும் வரவில்லை. ஆனால் அவர் வருவதற்கு ஒரு காலத்தை முன் குறித்திருந்தார். ஒரு நாள் தேவனுடைய கடிகாரத்தின் மணி அவருடைய பிறப்பை ஒலித்தது. அந்த வேளையில் வானம் திறக்கப்பட்டது. தேவதூதர்கள் அந்த பிறப்பைக் குறித்து பாடினார்கள். மேய்ப்பர்கள் அகமகிழ்ந்தார்கள். சாஸ்திரிகள் அந்த கடிகாரத்தின் நேரத்தை நட்சத்திரங்களின் மூலமாய் அறிந்து இயேசுவைத் தேடி வந்தார்கள்.
அதுபோலவே, இயேசு பூமியிலிருந்த நாட்களில் ஒவ்வொன்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய், செம்மையாய் செய்தார். அவருடைய கண்கள் பரலோக கடிகாரத்தையே நோக்கிக் கொண்டிருந்தது. கானா ஊரில் திராட்சரசம் குறைவுபட்டபோது, எல்லோரும் குறைவை எண்ணி அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கர்த்தரோ பொறுமையாய் தேவனுடைய கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்து, அவருடைய வேளை வந்தவுடன் தண்ணீரை திராட்சரசமாக்கிக் கொடுத்தார். தான் பூமியிலே பிறந்த நோக்கத்தை இயேசு திட்டமாய் அறிந்திருந்தார். ஏற்ற வேளையில் நமக்காக ஜீவனைக் கொடுப்பது அவருடைய நோக்கமும், அவருடைய சித்தமுமாயிருந்தது.
அவர் ஏற்ற நேரத்தில் சிலுவையில் உங்களுக்காக அறையப்பட்டார். சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போதே அவர் உங்கள் இரட்சிப்பின் காலத்தை அறிந்திருந்தார். இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும்போதே அவருடைய கண்கள் காலத்தை ஊடுருவி உங்களைக் கண்டது. இன்று நீங்கள் அமர்ந்து இதை வாசித்துக் கொண்டிருக்கிறதையும், அவர் அன்றைக்கே கண்டார். இன்று உங்களுக்கு இருக்கிற பிரச்சினைகளையும் நீங்கள் செல்லுகிற போராட்டத்தின் பாதைகளையும் அவர் அன்றைக்கே கண்டார். ஆம், அவர் ஒரு பெரிய நோக்கத்திற்காக உங்களை தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள்.
நினைவிற்கு:- "காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15).