நீங்கள் தேவனுடைய ஆலயம்!
"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1கொரி. 3:16).
நீங்கள் தேவனுடைய ஆலயம். உங்களுக்குள்ளே தேவனுடைய ஆவியானவர் தங்கியிருக்கிறார். தேவ ஆவியானவர் மூலமாய் தேவனுடைய மகிமை உங்களுக்குள் ஊற்றப்படுகிறது. உங்களுடைய கண்களிலே நீங்கள் தேவனுடைய ஆலயம் என்கிற தரிசனம் இருக்கவேண்டும்.
அன்று தாவீது, கேதுரு மரத்தினால் கட்டப்பட்ட அரண்மனையிலே உலாவிக் கொண்டிருந்தபோது தன்னை உயர்த்திய தேவனுக்கு ஒரு மகிமையான ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்ற வாஞ்சை கொண்டார். ஆகவே அதை தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் கர்த்தரோ அதற்கு சம்மதிக்கவில்லை.
ஏனென்றால் தாவீது அநேக யுத்தங்களை நடத்தி, யுத்த புருஷனாயிருந்து இரத்தத்தை சிந்தினபடியினால் ஆண்டவர் தாவீதின் கைகளின் மூலம் ஆலயம் கட்டப்பட விரும்பவில்லை. தேவபிள்ளைகளே, நீங்கள் யுத்த புருஷனாய் அல்லது யுத்த ஸ்திரீயாய் இருக்கிறீர்களா? சண்டை போடுகிறவர்கள், கோபப்படுகிறவர்கள், ஆத்திரப்படுகிறவர்கள், எரிச்சலடைகிறவர்கள் கட்டுகிற ஆலயத்திலே தேவனுடைய ஆவியானவர் வந்து வாசம் செய்ய முடியாது. கர்த்தருடைய ஆவியானவர் தொடர்ந்து உங்களிலே தங்கியிருக்கவேண்டுமென்றால் நீங்கள் கோபமோ, வைராக்கியமோ இல்லாதவர்களாயிருக்க வேண்டியது அவசியம்.
கர்த்தர் தாவீதைப் பார்த்து சொன்னார்: "உனக்குப் பதிலாக உன் மகன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். ஏனென்றால், அவனுடைய நாளில் தேசத்தில் சமாதானம் உண்டாகியிருக்கும். அவன் இளைப்பாறுதலின் புருஷன்" என்றார். கர்த்தர் உங்கள் சரீரமாகிய ஆலயத்திலே வாசம் பண்ணுகிறபடியினால், உங்கள் எல்லையெங்கும் சமாதானம் இருக்கட்டும். அவர் சமாதானத்தின் தேவன். சமாதான பிரபு. அவர் உங்கள் உள்ளத்திலே சமாதானத்தை எதிர்பார்க்கிறார்.
அன்று தாவீதால் ஆலயம் கட்ட முடியாமல் போனதைக் குறித்து தாவீதினுடைய உள்ளம் வேதனைப்பட்டு இருந்திருக்கக்கூடும். எனினும் தாவீது சோர்ந்து போவிடவில்லை. தான் அதுவரை கர்த்தருக்கென்று சேகரித்து வைத்திருந்த பொன், வெள்ளி, கேதுரு மரங்கள் எல்லாவற்றையும் கர்த்தருடைய ஆலயத்திற்கென்று மனப்பூர்வமாய் கொடுத்தார். அந்த ஆலயத்தை தாவீதினுடைய பொருட்கள் அலங்கரித்தன.
ஒரு வேளை கர்த்தர் உங்களை முழு நேர ஊழியத்திற்கு அழைக்காமல் இருந்திருக்கலாம். சபை நடத்தும் போதகராகவோ, எழுப்புதல் கூட்டங்களில் பிரசங்கிக்கிற சுவிசேஷகனாகவோ நீங்கள் காணப்படாமலிருக்கலாம். மனம் சோர்ந்து போகாதேயுங்கள். உங்களால் பகுதி நேரம் ஊழியம் செய்ய முடியுமே; கர்த்தருக்காக சாட்சி சொல்ல முடியுமே; கர்த்தருடைய ஊழியங்களுக்கு வாரிக் கொடுக்க முடியுமே.
சாலொமோன் தேவாலயத்தைக் கட்டி முடித்தபோது கர்த்தர் அந்த ஆலயத்தை தம்முடைய மகிமையால் நிரப்பினார். அங்கே இருந்த ஆசாரியர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்தரித்து பாடினபோது கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறைந்தது (2 நாளா. 5:13). தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளமாகிய தேவாலயம் தேவ மகிமையால் நிரம்பியிருக்கட்டும்.
நினைவிற்கு:- "அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று" (2 நாளா. 5:14).