தேவனுடைய ராஜ்யம்!

"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே" (லூக். 11:20).

சீஷர்களில் பலருக்கு தேவனுடைய ராஜ்யத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஓர் ஆசை இருந்தது. சிலருக்கு அந்த ராஜ்யத்திலே பெரியவனாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இன்னும் சிலருக்கு, அந்த ராஜ்யத்தில் ஒருவர் இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொருவர் இடது பக்கத்திலும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இயேசு கிறிஸ்துவோ "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்றார்.

நீங்கள் நித்தியமான மோட்ச ராஜ்யத்திற்குள் செல்லுவதற்கு முன்பாக அந்த ராஜ்யம் உங்களுக்குள் ஸ்தாபிக்கப்பட வேண்டியது அவசியம். உங்களுக்குள்ளே தேவனுடைய ராஜ்யத்தைக் கொண்டு வருவது எப்படி? ஆம், நீங்கள் அவரை முழு இருதயத்தோடு அழைக்கும்போது, அவர் வந்து உங்களுக்குள்ளே வாசம் பண்ணுவார். அதன் மூலம் பரலோக ராஜ்யம் முதலில் உங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்படுகிறது.

இன்றைக்கு அநேகக் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை பரலோகத்தை அனுபவிக்கிற சந்தோஷமான வாழ்க்கையாக இருக்கிறதில்லை. காரிருளும், வேதனைகளும்தான் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம், பிசாசு அவர்களை ஆண்டு கொண்டிருக்கிறான்.

உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. பிசாசு அவர்களுடைய வாழ்க்கையை ஆளுகைச் செய்கிறபடியினால் அவன் கொண்டு வருகிற வெறுப்பு, கசப்பு, வைராக்கியங்கள், தீய எண்ணங்கள் எல்லாம் மனுஷனுக்குள் குடி கொண்டிருக்கின்றன. ஆகவே, மனுஷன் சமாதானமில்லாமல் தவிக்கிறான்.

அநேகம் பேர் "உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்று சொல்லிப் பரமண்டல ஜெபம் செய்கிறார்கள். ஆனால், கிறிஸ்து அவர்களுடைய வாழ்க்கையில் வருவதற்கு தங்களை ஒப்புக் கொடுப்பதில்லை. கிறிஸ்துவினுடைய சித்தம் செய்வதற்கு தங்களை அர்ப்பணிப்பதில்லை. அவரை "ஆண்டவரே" என்று அழைக்கிறார்கள். ஆனால், ஆண்டவர் அவர்களை ஆளுவதற்கு விட்டுக்கொடாமல் சுயசித்தத்தின்படி நடக்கிறார்கள்.

பரலோகராஜ்யம் உங்களுக்குள்ளே வரவேண்டுமென்றால் முதலாவதாக, உங்களுக்குள்ளே இருக்கிற அந்தகாரலோகாதிபதியின் ஆட்சி நீங்கியாகவேண்டும். தேவனுடைய சுவிஷேத்தின் ஒளி உங்கள் உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். நீங்கள் உண்மையாக உங்கள் பாவங்களுக்காக வருந்தி, மனஸ்தாபப்பட்டு, ‘கல்வாரிச் சிலுவையிலே நீர் இரத்தம் சிந்தினீர்! உம்முடைய இரத்தத்தினால் என்னைக் கழுவிப் பரிசுத்தமாக்கும்’ என்று கெஞ்சும்போது, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும். 

தேவபிள்ளைகளே, ‘ஆண்டவரே, நீர் என் உள்ளத்தில் வாரும்’ என்று நீங்கள்  அழைக்கும்போது, அவர் நிச்சயமாகவே உங்களுக்குள் வருவார். இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் வரும்போது, அவர் முதலில் செய்கிற காரியம், தன்னுடைய விரலினாலே பிசாசுகளை துரத்தி, தேவனுடைய ராஜ்யத்தை உங்களுக்குள் ஸ்தாபிப்பதே.

 நினைவிற்கு:- "அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது" (உபா. 9:10).