தேவ அன்பு!

"மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5).

நீங்கள் ஆராதிக்கிற தேவன் அன்புள்ளவர். நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பு, கிறிஸ்துவின் அன்பினாலே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பெற்றிருக்கிற அபிஷேகத்தினாலே, தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது.

ஒருநாள் ஒரு சகோதரி போதகரைக் காண்பதற்கு ஆவலோடு ஓடி வந்தாள். ‘பாஸ்டர், ஒரு குட் நியூஸ்! ஒரு ஹேப்பி நியூஸ்!’ என்றாள் உற்சாகமாக. போதகர் அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சபை விசுவாசி நல்ல செய்தியோடு வந்தால் அவருக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும். ‘என்னம்மா சந்தோஷமான அந்த செய்தி? உனக்கு வேலை கிடைத்து விட்டதா? உன் கணவருக்கு பதவி உயர்வு வந்ததா? அல்லது வெளி நாட்டில் இருந்து உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள் யாரும் வந்தார்களா?’ என்று போதகர் அன்போடு விசாரித்தார்.

அதற்கு அந்த சகோதரி ‘அதுவொன்றுமில்லை பாஸ்டர், என்னை வாட்டி வதைத்த வாதை நீங்கி விட்டது. என் மாமியார் மரித்து விட்டார்கள்’ என்றாள் சந்தோஷத்தோடு! போதகருக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. பாருங்கள்! மருமகளுக்கு மாமியார் மீது அன்பில்லை. மாமியாருக்கு மருமகள் மீது அன்பில்லை. கணவன் மீது மனைவிக்கு அன்பில்லை. பெற்றோர் மீது பிள்ளைகளுக்கு அன்பில்லை. அன்பில்லாத ஒரு சமுதாயத்தில் நீங்கள்  வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் உள்ளமோ அன்புக்காக ஏங்குகிறது.

பல சுயநலமான, மாய்மாலமான அன்புகளின் மத்தியிலே, கர்த்தருடைய அன்பு மாத்திரமே தியாகமான அன்பாக இருக்கிறது. அந்த அன்பு கடைசி வரை மாறாத அன்பு; உங்கள் உள்ளம் பூரித்து மகிழுகிற அன்பு; தேவபிள்ளைகளே, உங்கள் குடும்பத்தில், உங்கள் உள்ளத்தில் அன்பு ஆட்சி செய்கிறதா? காண்கிற சகோதரர்களிடத்தில் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்களா?

வேதம் சொல்லுகிறது, "ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை" (1 யோவான் 2:9-10).

இயேசு சொன்னார், "நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போ, முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து" (மத். 5:23-24).

இயேசு உங்களை எவ்வளவாய் சிநேகிக்கிறார்! அவர் தெய்வமாகவும், தகப்பனாகவும், தாயாகவும், சகோதரனாகவும், மாத்திரமல்ல சிநேகிதனாகவும் உங்களில் அன்புகூருகிறார். ஒருவன் தன் சகோதரனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவனிடத்திலும் இல்லை என்று சொல்லி தனது தியாக அன்பை வெளிப்படுத்துகிறார். அந்த அன்பை உங்களது வாழ்க்கையில் பிரதிபலிப்பீர்களா?

நினைவிற்கு:- "நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலா. 2:20).