கர்த்தரையே நோக்கட்டும்!

"எனக்கு ஓத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1).

வழுவாதபடி நிலைத்துநிற்கும் வழியை தாவீது ராஜா அறிந்திருந்தார். அது கர்த்தருக்கு நேராய் எப்பொழுதும் கண்களை ஏறெடுக்கும் வழிதான். ஆம், கர்த்தரையே நோக்கிக் கொண்டிருக்கிறவர்கள் வழுவி விழுவதேயில்லை. தேவ ஒத்தாசையால் அவர்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவார்கள்.

ஒரு ஊழியர், "சோதனை வரும்போதெல்லாம் இயேசுவே, இயேசுவே என்று சொல்லிக் கொண்டிருந்ததால் வழுவாதபடி கர்த்தரில் நிலைத்து நின்று விடலாம்" என்று சொன்னார். இது எத்தனை உண்மையானது! ஒரு நாள் பேதுருவின் கால்கள் வழுவினது. தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்தார். கர்த்தரை அவருடைய கண்கள் காணாமல் கடல் அலையை நோக்கினதினாலே அவர் வழுவ வேண்டியதாயிற்று. வழுவினது மாத்திரமல்லாமல் தண்ணீருக்குள் அமிழ்ந்துபோக வேண்டியதுமானது. அந்த சூழ்நிலையில் வழுவாதபடி காக்கிறவரை நோக்கி, "ஆண்டவரே, என்னை இரட்சியும்" என்று கூப்பிட்டார் (மத். 14:30).

வேதம் சொல்லுகிறது, உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து தூக்கி நிறுத்தினார். படகில் ஏற்றினார் (மத். 14:31). தேவபிள்ளைகளே, எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் நிச்சயமாய் உங்களை தூக்கியெடுப்பார். உங்களுக்கு ஒத்தாசை செய்வார்.

தாவீது ராஜா, "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக நான் என் கண்களை ஏறெடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு , கூடவே ஒரு விசுவாச அறிக்கையையும் செய்கிறார். ‘வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்’ என்கிறார். ஆம், உங்களுடைய கண்கள் கர்த்தரையே நோக்கிக் கொண்டிருந்தால் நிச்சயமாகவே உங்களுக்கு ஒத்தாசை வரும். வழுவாதபடி நிலைநிறுத்தும் ஒத்தாசை அது!

ஜீவிய காலமெல்லாம் வழுவாதபடி உங்களை நிலைநிறுத்த கர்த்தர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்; வேதம் சொல்லுகிறது, "...அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபி. 7:25).

உங்களை வழுவாதபடி நிலைநிறுத்த வல்லமையுள்ளவரை உறுதியாப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அவரை உறுதியாய் பிடிக்கும்போது அவரும் உங்களை உறுதியாய் பிடிப்பார். சில தாய் குரங்குகள், குட்டிகளை தூக்கிக்கொண்டு மரத்தின் மேலும் மலையின் மேலும் ஏறும். அந்த குட்டி என்ன செய்யும் தெரியுமா? தாய்க் குரங்கை உறுதியாய் பிடித்துக்கொள்ளும். தாய்க் குரங்கு ஒவ்வொரு மரமாகத் தாவினாலும் குரங்குக் குட்டி கீழே விழுவதில்லை.

அதுபோலவே தாய்ப் பூனை தன் குட்டியை கவ்விக்கொண்டு பல வீட்டு கூரையை தாவிச் செல்லும். அந்த குட்டிகள் கீழே விழுவதில்லை. நீங்கள் கர்த்தரை குரங்குப் பிடியாய் பிடிக்கும் போது, தாய்ப் பூனை தன் குட்டியை கவ்விச் செல்லுவதைப் போல அவர் உங்களை அருமையாய் வழிநடத்திச் செல்லுவார். நீங்கள் வழுவுவதுமில்லை, விழுவதுமில்லை. ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், "உம்மை உறுதியாப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசா. 26:3).

நினைவிற்கு:- "என் இருதயம் தொயும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்" (சங். 61:2).