சமீபமாய் வரும் கிறிஸ்து!
"...அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்" (மத். 24:33).
கிறிஸ்து உங்களுக்கு சமீபமாயிருக்கிறார். உங்களுடைய ஜெபத்திற்கு சமீபமாயிருக்கிறார். உங்கள் வேண்டுதலுக்கும், அங்கலாய்ப்புகளுக்கும் சமீபமாய் வந்து கவனித்துக் கேட்கிறார். அவர் உங்களுக்கு சமீபமாயிருந்து உங்களை ஆற்றித் தேற்றுவது மாத்திரம் அல்ல, எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார்.
வேதத்தில் மாற்கு 10-ம் அதிகாரத்தில் பிறவி குருடனாகிய பர்திமேயுவைக் குறித்து வாசிக்கலாம். வழி அருகே உட்கார்ந்து பிச்சை கேட்பதே அவனுடைய தொழிலாய் இருந்தது (மாற்கு 10:46). அவன் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், அவர் செய்கிற அற்புதங்களைக் குறித்தும், வியாதிகளை சொஸ்தமாக்குகிறதைக் குறித்தும் கேள்விப்பட்டிருந்தான். இயேசுவைப் பார்க்க அவனுடைய கண்களில் ஒளியுமில்லை. பார்வையுமில்லை. இயேசுவினிடம் அவனை நடத்திச் செல்லவும் ஒருவருமில்லை. யூதேயாவிலும், கப்பர்நகூமிலும், எருசலேமிலும் இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் கேட்கமட்டுமே செய்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு நாள் இயேசு அவன் இருந்த சமாரியாவிற்கு வந்தார். மட்டுமல்ல, அவனுடைய அருகிலேயே சமீபமாய் கடந்து வந்தார். இயேசு தன் பக்கமாக சமீபித்து வருகிறார் என்று அவன் அறிந்தபோது, அந்த சந்தர்ப்பத்தை அவன் இழந்துவிட விரும்பவில்லை. "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று கூப்பிடத் தொடங்கினான்.அவனைப் பேசாமல் இருக்கும்படி அநேகர் அதட்டினார்கள். அதைக்கேட்டு அவன் மனம் சோர்ந்து போகவில்லை. "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று முன்னிலும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
இயேசு நின்று அவனை அழைத்து வரச்சொன்னார். இயேசு முதலில் அவனுடைய அருகில் கடந்து வந்தார். பின்பு அவனைத் தன்னருகே கடந்து வரச்செய்தார். இரண்டு பேருமாக அருகில் வந்து விட்டார்கள். இயேசு அவனை அன்போடு அழைத்து ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று வினவினார். அதற்கு அவன் "ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்" என்றான்.
அவன் பார்வையடைந்த பின் முதலாவது யாரைப் பார்த்திருப்பான் தெரியுமா? தனக்காக பரலோகத்தை விட்டு மிக சமீபமாய் இறங்கி வந்த கிறிஸ்துவையே கண் குளிர பார்த்திருந்திருப்பான். தன்னை சிருஷ்டித்த தேவன் தனக்கு அருகில் இருப்பதை உணர்ந்து அவரையே பார்த்துக் கொண்டேயிருந்திருப்பான். அவருடைய பொன் முகத்தின் அழகிலே மெய்மறந்து ஆயிரம் பேரிலும், பதினாயிரம் பேரிலும் சிறந்தவரான தேவ குமாரனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்திருப்பான்.
தேவபிள்ளைகளே, நீங்கள் இதுவரை ஒருவேளை கிறிஸ்து செய்த அற்புதங்களை வேதத்தில் எழுதப்பட்டவைகளாக மட்டுமே அறிந்திருக்கக் கூடும். மற்றவர்கள் கூறும் சாட்சிகளையே கேட்டு காலத்தை கடத்தியிருக்கக் கூடும். ஆனால் இன்று கர்த்தர் தனிப்பட்ட முறையில் உங்களுடைய அருகில் கடந்து வந்திருக்கிறார். அவரை விட்டு விடாதேயுங்கள். அன்று அந்த பிறவி குருடன் நடைபாதையிலிருந்து பலத்த சத்தமாக தாவீதின் குமாரனே, இயேசுவே எனக்கு இரங்கும் என்று வேண்டிக் கொண்டதைப் போல் நீங்களும் இன்று அழைப்பீர்களென்றால், நிச்சயமாகவே, அவர் உங்கள் வாழ்க்கையில் ஒரு அதிசயத்தை செய்வார்.
நினைவிற்கு:- "அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்" (லூக். 10:9).