கிறிஸ்துவின் வருகை!

"நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்.24:44).

நீங்கள் செலவழித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வினாடி நேரத்திலும் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையை எதிர்நோக்கி சென்று கொண்டேயிருக்கிறீர்கள். நினையாத நாழிகையிலே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வருவார்.

புத்தகக் கடை ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தின் தலைப்பைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். காரணம் அந்த புத்தகத்தின் தலைப்பு "இயேசு வரமாட்டார்" என்பதேயாகும். இயேசு வரமாட்டார் என்பதற்கு அதன் ஆசிரியர் பல காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். "முதல் முறை இயேசு உலகத்திற்கு வந்தபோது ஒன்றும் சாதிக்கவில்லை. இரண்டாவது முறை ஏன் அவர் வரப்போகிறார்? வரமாட்டார். கிறிஸ்துவின் ஊழியர்களெல்லாம் உண்மையற்றவர்களாயிருக்கிறார்கள். அதை காண்பதற்காகவா அவர் வரப்போகிறார். அவர் வரமாட்டார்" என்றெல்லாம் எழுதியிருந்தது. அதை எழுதிய ஆசிரியர் ஒரு கிறிஸ்தவர். கர்த்தருடைய வருகைக்காக ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டிய ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்து வரமாட்டார் என்று புத்தகம் எழுதுவது எத்தனை வேதனைக்குரியது!

தேவபிள்ளைகளே, இயேசுவின் வருகைக்கு ஏற்றவர்களாக நீங்கள் வாழுகிறீர்களா? கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் மகிமையான வருகைக்கென்று ஒரு கூட்டம் ஜனங்களை ஆயத்தப்படுத்துகிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள். அவர் வருகிற வரையிலும் நீங்கள் ஊழியம் செய்யும்படி திருமறைக்கேற்றபடி அவர் தாலந்துகளை தந்திருக்கிறார். ஐந்து தாலந்தோ அல்லது இரண்டு தாலந்தோ அல்லது ஒரு தாலந்தோ எதுவானாலும் சரி, அதைக்கொண்டு  நீங்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்யவேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவேண்டும். மட்டுமல்லாமல் உங்களிடத்திலுள்ள தாலந்துகளைக் குறித்து நீங்கள் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதையும் மறந்து போய்விட வேண்டாம்.

அநேகர் வருகையின் தரிசனத்தை இழந்திருக்கிறபடியால், ஊழியத்தில் உற்சாகமில்லாமலிருக்கிறார்கள். துணிகரமான பாவங்களுக்குச் சென்று விடுகிறார்கள். அதே நேரத்தில் ஒருவன் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையை எதிர்நோக்கி வாழ்வானானால், அவன் பாவத்தை மேற்கொள்ளுவது மட்டுமல்ல, ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் ஊக்கமுள்ளவனாய் இருப்பான். கிறிஸ்து வருகிறார் என்பதை கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றைக்கு அறிந்திருக்கிறார்களோ இல்லையோ சாத்தான் அதை நன்கு அறிந்திருக்கிறான். ஆகவேதான் சாத்தான் தனக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உண்டு என்பதை அறிந்து யாரை விழுங்கலாமோவென்று வகைதேடி சுற்றித் திரிகிறான். பாவங்களையும் அக்கிரமங்களையும் முடுக்கி விடுகிறான்.

கிறிஸ்துவின் வருகை ஏதோ சில ஆண்டுகளுக்கு பிறகு இருக்கும் என்று எண்ண வேண்டாம். கிறிஸ்துவினுடைய வருகை நினையாத நாளில் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அடுத்த நிமிடம் கர்த்தர் வருவார் என்கிற எதிர்பார்ப்போடு ஜீவியுங்கள். வேதம் சொல்லுகிறது, "மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்!" (மத். 24:27,36).

நினைவிற்கு:- "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளி.22:12).