கிறிஸ்து வந்த நோக்கம்!
"பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்" (லூக். 12:49).
இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்த நோக்கமும், அதன்மீது அவருக்கிருந்த அளவற்ற தாகமும், வாஞ்சையும் இந்த வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. "அக்கினியைப் போட வந்தேன்" என்று கர்த்தர் சொல்கிறார்.
‘இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தார். இழந்து போனதைத் தேடிவந்தார்; சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தார்; பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வந்தார்; நித்திய ஜீவனை தருவதற்கு வந்தார்’ என்றெல்லாம் பிரசங்கங்களைக் கேட்கிறீர்கள். ஆனால் இயேசுகிறிஸ்து இன்னொரு மேலான முக்கியமான நோக்கத்தை மேலே உள்ள வசனத்தில் வெளிப்படுத்துகிறார். "அக்கினியைப் போட வந்தேன்" என்கிறார்.
என் ஜனங்கள் அக்கினியாய் ஜீவிக்க வேண்டும், பாவம் நெருங்காதபடி சோதனை மேற்கொள்ளாதபடி அக்கினியாய் வாழ வேண்டும், சத்துருவினுடைய வல்லமையை சுட்டெரிக்கிற அக்கினி அவர்களோடு இருக்கவேண்டும், அவர்கள் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்பதற்காகவே ‘நான் அக்கினியை போட வந்தேன்’ என்று கர்த்தர் சொல்கிறார்.
தேவபிள்ளைகளே, எலியாவின் வாழ்க்கையெல்லாம் அக்கினியால் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. அவர் உள்ளத்தில் பக்தி வைராக்கிய அக்கினி பற்றியெரிந்து கொண்டிருந்தபடியினால் தனியனாக பாகால் தீர்க்கதரிசியை எதிர்த்து நின்றார். ‘அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே தேவன்’ என்று முழங்கி வானத்திலுள்ள அக்கினியை இறங்கப் பண்ணினார். அன்று எல்லா இஸ்ரவேலருடைய இருதயமும் கர்த்தர் பக்கமாக திருப்பப்பட்டது.
யோவான்ஸ்நானகனைக் குறித்து "அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்கைப் போல இருந்தான்" என்று வேதம் சொல்லுகிறது. அவனுடைய வெளிச்சத்தண்டை அநேக ஜாதிகள் ஓடி வந்தார்கள். சுயநலமற்ற ஒரு நேச அக்கினியால் யோவான்ஸ்நானகன் நிரம்பியிருந்தான். கிறிஸ்துவினுடைய முதலாம் வருகைக்கு முன்பாக எப்படி அவர் அக்கினியாய் ஜீவித்து வழிகளை ஆயத்தம் பண்ணினாரோ, அதைப்போல கிறிஸ்துவினுடைய வருகை நெருங்கியிருக்கிற இந்நாளிலே அவருக்காக நீங்களும் வழிகளை ஆயத்தம் பண்ணுவீர்களாக.
"பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன்" என்று சொன்ன ஆண்டவர் சீஷர்களை எருசலேமிலே மேல் வீட்டு அறையிலே ஒன்றா கூட்டிச் சேர்த்தார். அவர்கள் உன்னதத்திலிருந்து வருகிற பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் அங்கே காத்திருந்து, ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள் (லூக். 24:49). பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள். அக்கினிமயமான நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அன்று ஒரு பெரிய எழுப்புதல் தீப் பற்றிப் பிடித்தது.
பூமியின் மேல் அக்கினியை போட வந்தவர் உங்களிலே தன்னுடைய பரிசுத்த அக்கினியை ஊற்றும்படி விரும்புகிறார். கர்த்தர் சொல்கிறார்: "சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்" (ஏசா. 62:1). தேவபிள்ளைகளே, தேவனே நீர் அனுப்பும் எழுப்புதல் அக்கினி என்னை தீவட்டியாக, விறகாக பயன்படுத்தட்டும் என்று மன்றாடுவீர்களா?
நினைவிற்கு:- "என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்" (சங். 39:3).