கண்டுபிடித்தேன்!

"என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்" (சங். 89:20).

சிலர் பள்ளிக்கூட வாழ்க்கையிலே எப்படி சந்தோஷமாயிருந்தோம் என்பதை நினைத்து மகிழுகிறார்கள். சிலர் தங்களுக்கு எப்படித் திருமணம் நடந்தது என்பதை நினைத்து மகிழுகிறார்கள். சிலர் தாங்கள் செய்த வீரதீர செயல்களை நினைவுகூர்ந்து மகிழுகிறார்கள். ஆனால் கர்த்தரோ, உங்களை எப்படி அவர் கண்டுபிடித்தார், எப்படி மீட்டுக் கொண்டார், எப்படி அபிஷேகித்தார் என்பதையெல்லாம் எண்ணி மனம் மகிழுகிறார்.

கர்த்தர் தாவீதைக்குறித்து, "என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன். என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை. அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ள மட்டும் நிலைநிற்கவும் செய்வேன்" (சங். 89:20-29) என்று சொல்லுகிறார்.

"என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்" என்று கர்த்தர் ஆரம்பிக்கிறார். அதே கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் கண்டு பிடித்திருக்கிறார்.  கர்த்தருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற கர்த்தருடைய கண்கள், நீங்கள் சிறுமையாயிருந்த நாட்களில், தீமையின் நாட்களில், வேதனையின் நாட்களில் உங்களைக் கண்டது. உங்களைக் கண்ட தேவன் உங்களை பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் நிரப்ப பிரியங்கொண்டார்.

அன்றைக்கு சாமுவேல் தன் தைலக்குப்பியை எடுத்து தாவீதை சகோதரர்கள் மத்தியிலே அபிஷேகம்பண்ணினார்.  கர்த்தர் உங்களையும் அவ்வாறே அபிஷேகம் பண்ணியிருக்கிறார். "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளி. 1:6).

தாவீதின் வாழ்நாளெல்லாம் கர்த்தர் ஜெயத்தையே தந்தார். அந்த தேவன் இன்றைக்கு உங்களோடு உடன்படிக்கை செய்ய விரும்புகிறார்.  தேவபிள்ளைகளே, உங்களைக் கண்ட கர்த்தர் சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் தந்தருளுவார்.

நினைவிற்கு :- "அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப் போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்" (சங். 89:36).