கணக்கு!
"என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?" (சங். 56:8).
ஒவ்வொரு மனிதனைப்பற்றிய கணக்கும் கர்த்தரிடமுண்டு. மனுஷன் பல காரியங்களைக் குறித்து கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியதிருக்கிறது. அவன் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தையைக் குறித்தும், தன் சரீரத்தைக் குறித்தும் தேவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். தேவன் அவனுக்குக் கொடுத்த தாலந்துகள், திறமைகள், வரங்கள் ஆகியவற்றைக் குறித்து கணக்குக் கொடுக்க வேண்டும். மட்டுமல்ல, அவன் செலவழிக்கிற ஒவ்வொரு வினாடி நேரத்தைக் குறித்தும் கர்த்தருக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்.
தாவீது, "ஆண்டவரே பல காரியங்களைக் குறித்து என்னிடத்தில் கணக்கு கேட்கிறீர். நானோ, நான் வடித்த கண்ணீரைக் குறித்து பதில்பெறும்படி உம்மிடத்தில் கணக்கு கேட்பேன். உம்முடைய கணக்கில் என் கண்ணீர் இருக்கட்டும்" என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தாவீது ராஜாவின் ஜெபத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ‘என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர். என் கண்ணீரை உமது துருத்தியில் வையும். அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார்.
கர்த்தருடைய ஊழியத்தின் நிமித்தம் நீங்கள் அலைந்த அலைச்சல்களை கர்த்தர் மறந்து விடுகிறவரல்ல. அதற்கென நீங்கள் கொடுக்கும் காணிக்கையை அவர் மறந்து விடுகிறவரல்ல. கர்த்தருடைய சமுகத்தில் ஆத்துமாக்களுக்காக பாரத்தோடு கண்ணீர் சிந்தி ஜெபிக்கும் ஜெபங்களை அவர் மறந்து விடுகிறவரல்ல. அவைகள் கர்த்தருடைய கணக்கில் இருக்கிறது. ‘என் கண்ணீரை உம்முடைய கணக்கில் வையும்’ என்று தாவீது ஜெபிக்கிறார்.
கர்த்தருடைய சமுகத்தில் நீங்கள் ஏறெடுக்கிற முக்கியமான ஒரு காரியம் தான் கண்ணீர். கண்ணீரின் ஜெபம் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தருகிறது, நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தருகிறது. இம்மைக்குரிய நன்மைகளுக்காக கண்ணீர் சிந்துகிறவர்கள், இம்மைக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். நித்தியத்தின் காரியங்களுக்காக பெருமூச்சும், கண்ணீரும் சிந்துகிறவர்கள் நித்தியமான பலனைப் பெற்றுக்கொள்ளுவார்கள்.
அன்னாள் கண்ணீர் சிந்தினாள். சக்களத்தியின் கொடுமை தாங்கமுடியாமல் எத்தனை நாட்கள் தனிமையிலே அவள் கண்ணீர் சிந்தினாளோ தெரியாது. அந்த கண்ணீரானது, கர்த்தருடைய துருத்தியில் சேர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு நாள் வந்தது. தேவ சமுகத்திலே போய் கண்ணீர் சிந்தி தேவனுடைய துருத்தியை நிரப்பிவிட அவள் தீர்மானித்தாள். பிள்ளையில்லாத குறை அவளுடைய உள்ளத்தை வாட்ட, தேவனுடைய ஆலயத்திற்கு போய் மனங்கசந்து அழுதாள். கர்த்தர் அந்த கண்ணீரைக் கண்டார். அவளுடைய வயிற்றிலே பெரிய தீர்க்கதரிசியை உருவாக்கிவிட்டார். அவள் ஆசீர்வாதமான சாமுவேலுக்கு மாத்திரமல்லாமல், இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக மாறினாள்.
தேவபிள்ளைகளே, இன்று நீங்கள் கண்ணீரின் பாதையில் நடக்கிறீர்களா? நீங்கள் சிந்துகிற ஒவ்வொரு துளிக் கண்ணீரும் ஒவ்வொரு பெருமூச்சின் சத்தமும், ஒவ்வொரு அங்கலாய்ப்பும் ஒவ்வொரு அலைச்சலும் கர்த்தருடைய கணக்கிலே குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
நினைவிற்கு: - "கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்" (சங். 115:12).